அரச பாடசாலைகள் மூடப்படுமா? அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முக்கிய விளக்கம்

 அரசாங்கம் எந்தவொரு அரச பாடசாலையையும் தன்னிச்சையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள பாடசாலைகள் குறித்து மட்டுமே கோட்ட மற்றும் வலய மட்டத்தில் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

வெறும் பாடசாலைகளைத் திறந்து வைப்பதை விட, நாட்டின் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தரமான மற்றும் வசதிகள் நிறைந்த கல்வியை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக மிக விரைவில் 3,000 புதிய ஆசிரியர்கள் கல்வி அமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், திட்டமிடப்பட்டுள்ள புதிய பாடத்திட்ட மறுசீரமைப்புகள் 2027 ஆம் ஆண்டளவில் 1, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேர மாற்றம் குறித்து இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும்,

எதிர்காலத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படும் பட்சத்தில் அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

Post a Comment