பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை, ஏதிர் வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) அழைக்கப்பட்ட போது, பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இரண்டாம் பிரதிவாதியான டெய்சி ஃபாரஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா மருத்துவ அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன்பின்னர், முன்வைக்கப்பட்ட காரணங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதையடுத்து, முன்விசாரணைகாக இந்த வழக்கை நவம்பர் மாதம் 03 ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சுமார் 57 மில்லியன் ரூபாவை மூன்று வங்கிப் கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் குற்றம் சுமத்தி யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
