சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வந்த இந்தியப் பிரஜைகள் தவறவிட்ட, 31 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான அமெரிக்க டொலர் பணத்தை திருடியதாகக் கூறப்படும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர், நேற்று (24) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வந்திருந்தனர்.
நீதிமன்றத்திற்குள் செல்வதற்கு முன்னர், கைத்தொலைபேசியை ஒப்படைத்த இடத்தில், ஒருவர் அமெரிக்க டொலர் பணம் இருந்த உறையை தவறுதலாக வைத்துவிட்டு நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார்.
வழக்கு முடிந்த பின்னர் உறை காணாமல் போனதை அறிந்த அவர், உடனடியாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த சம்மாந்துறை பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இரு பெண்களை கைது செய்து தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள CCTV காட்சிகளின் உதவியுடன் பணத்தை மீட்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
