மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
வெல்லவாய - மொனராகலை வீதியின் கும்புக்கன, களு பாலத்தில் வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் வண்டியொன்று, அதற்கு எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த 10 பேரில் எட்டுப் பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடைய தொடங்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்த ஏனைய மூவரும் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வண்டியின் சாரதி மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
