வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்த ஆண்டு இறுதிக்குள் ஆசிரியர் ஆட்சேர்புக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும் என பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை 06.08.2026 நடைபெற்ற கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்கள் கலந்தாய்வு குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
குறித்த மாகாணங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க நீண்டகால உத்தி தேவை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மூன்று மாகாணங்களிலும் நடைபெறும் பாடசாலை கட்டிட மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.
