கிளிநொச்சி அறிவியல் நகர் புகையிரதக் கடவையில் விபத்து – 22 வயது யுவதி உயிரிழப்பு
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த புகையிரதக் கடவையில் கடந்த சில நாட்களாக சமிக்ஞை விளக்குகள் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் முறையாக இயங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்திலும் சமிக்ஞை அமைப்பு முறையாக இயங்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் வகையில் குறித்த புகையிரதக் கடவையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
