டிக்கோயா இரட்டை கொலை-தம்பதியினரின் இறுதி யாத்திரை

டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் கொலை செய்யப்பட்ட வயோதிப தம்பதியினரின் இறுதிக் கிரியைகள் இன்று (24) நடைபெற்றுள்ளது. 

பிரதேச மக்கள் மற்றும் உறவினர்களின் கண்ணீருடன் இறந்தவர்களின் உடல்கள் இன்றைய தினம் டிக்கோயா தரவளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

டிக்கோயா பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் கடந்த வியாழக்கிழமை (21) 85 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் 82 வயதுடைய அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் முழு நாட்டிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

சம்பவம் தொடர்பில் வர்த்தக நிலையத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்தப்பட்டிருந்தது. 

இதனடிப்படையில் இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், பொகவந்தலாவை - பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில்,நேற்று (23) மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சந்தேகநபர், கடந்த 21ஆம் திகதி வயோதிப தம்பதியினரை கொலை செய்துவிட்டு தலை மறைவாகியிருந்தார். 

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற பொகவந்தலாவை பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர். 

பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர், கொழும்பில் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் கெம்பியன் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் தொடர்பைப் பேணி வந்துள்ளார். 

குறித்த பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்த போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். 

இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் தவிர, பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் 8 பவுன் தங்க நகைகளைக் அங்கிருந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர் சம்பவம் நடந்த நாள் காலை முதலே டிக்கோயா பகுதியில் நடமாடியதுடன், நகைக்கடைகளுக்குச் சென்று வந்தமையும், கொலை நடந்த வர்த்தக நிலையத்தை நோக்கிச் செல்லும் காட்சியும் சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தன. 

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளை, சந்தேகநபர் இறுதியாக தங்கியிருந்த இடத்திலிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment