திருமணத்தை மீறிய உறவால் விபரீதம்... பெண்ணை கத்தியால் குத்திய காதலன்... பின்னணி என்ன...?
உத்திரமேரூர் அருகே திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை அவரது காதலன் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுகாயமடைந்த பெண் உயிருக்குப் போராடி வரும்நிலையில், குடும்பத்தினரும் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. நடந்தது என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலா என்கிற பலராமன். அவரது மனைவி 35 வயதான பெண். இந்தத் தம்பதிகளுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். பலராமன் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திருவிழாக்களுக்கு பந்தல் அமைப்பது, மைக் செட், அலங்கார விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார். இதனால் பலராமன் இரவு பகல் பார்க்காமல் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக உழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் பலராமனின் மனைவிக்கு அதே ஊரைச் சேர்ந்த 27 வயதான வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வசந்த் அந்தப் பெண்ணை விட எட்டு வயது சிறியவர் என்பதால் ஊர் மக்கள் யாரும் அதை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. வசந்துக்கும் திருமணமாகி மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கும், வசந்துக்கும் இருந்த நட்பு நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது. பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகள் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் இருக்க ஆரம்பித்துள்ளனர். இந்தத் திருமணத்தை மீறிய பழக்கம் ஊர் மக்களுக்கும், கணவர் பலராமனுக்கும், வசந்தின் மனைவிக்கும் தெரியவந்துள்ளது.
இதனால் இருவரையும் அழைத்து ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். ஆனாலும் இருவரும் தங்களது பழக்கத்தை கைவிடாததால் பெண்ணின் கணவர் பலராமன் அவரது குழந்தைகளோடு தனியாக சென்றுவிட்டார். ஒரு கட்டத்தில் காதலர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியூர்களுக்குச் சென்று தனிமையில் இருக்க ஆரம்பித்துள்ளனர்.
அதேபோல கடந்த ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை இருவரும் சென்னை கொளத்தூர் பகுதிக்குச் சென்று அறை எடுத்து தங்கியிருக்கின்றனர். அப்போது அந்தப் பெண் வசந்திடம் உன்னால்தான் நான் என் குழந்தைகளையும், கணவனையும் விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறேன். ஆனால் நீ மட்டும் உன் மனைவி குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கிறாய். அதனால் நீ உன் மனைவி குழந்தைகளை விட்டு என்னோடு வந்துவிடு. நாம் எங்காவது சென்று வாழலாம். இல்லையென்றால் என்னை விட்டுவிடு. நான் இனி உன்னோடு எங்கும் வரமாட்டேன் என்று கூறியதாகத் தெரிகிறது.
ஏற்கனவே பலமுறை இதேபோன்று அந்த பெண் வசந்திடம் சண்டை போட்டிருக்கிறார். இதனால் அவர் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். தற்போது மீண்டும் வற்புறுத்தவே ஆத்திரம் தலைக்கேறிய வசந்த் அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார். அதற்காக சம்பவத்தன்று தயாராக கத்தி ஒன்றையும் எடுத்து வந்துள்ளார். வழக்கம்போல அன்று ஏற்பட்ட வாக்குவாதம் சற்று அதிகரிக்கவே, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார் வசந்த்.
உடனே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் கழுத்து, முதுகு, கை போன்ற பல்வேறு பகுதிகளில் சரமாரியாக குத்தியிருக்கிறார். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அதற்குள் வசந்த் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்டு கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அப்பகுதியினர் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார் தலைமறைவான வசந்தை உத்திரமேரூர் பகுதியில் தேடி வந்தனர்.
இதனிடையே வசந்தை போலீசார் அவரது செல்போன் சிக்னலை வைத்து சென்னை மாதவரத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆனால் கத்திக்குத்து பட்ட பெண்ணோ மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். பெண்ணின் குடும்பத்தார் யாரும் அவரைப் பார்க்க வரவில்லை என்று கூறப்படுகிறது.
திருமணத்தை மீறிய உறவால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே பறிபோன சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
