எரிபொருள் தொடர்பில் சற்று முன் ஜனாதிபதி அதிரடி உத்தரவு

 

எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து ஒவ்வொரு அமைச்சும் ஒரு நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது தரவுகளின் அடிப்படையில் குறைந்த மின்சக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் ஒரு நிலையான செயல்முறையாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பான அவசர அறிக்கையை அமைச்சு மட்டத்தில் வழங்குமாறு அறிவுறுத்தினார்.

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினருடன் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். நேற்று (16) அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைகளின்படி, அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்கான அரச மற்றும் தனியார் விநியோகச் சங்கிலிகளைத் தடையின்றிப் பேணி, மக்களுக்குத் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக இக்குழு நியமிக்கப்பட்டது.


எரிபொருள் விலை உயர்வுடன் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, விவசாய மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் மக்களுக்கு வழங்குவதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் விலைக் கட்டுப்பாட்டிற்கான மாற்று வழிமுறைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.


சதொச உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மொத்த இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் எரிபொருள் தேவைகள் குறித்த தகவல்களைச் சேகரித்து, அந்தச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காகக் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.


சுற்றுலாத் துறையின் எரிபொருள் தேவையை ஆராய்ந்து, முன்னர் பயன்படுத்தப்பட்ட QR முறையைப் பேணுவது குறித்தும், ஹோட்டல்களுக்குத் தேவையான எரிவாயு மற்றும் எரிபொருள் வசதிகளைச் செய்துகொடுப்பதற்கான ஒரு பொறிமுறை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. பலநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் துறைமுக நடவடிக்கைகளுக்காக எரிபொருள் வழங்குவது தற்போது இடம்பெற்று வரும் நிலையில், அந்த ஒதுக்கீட்டு அளவுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.


கைத்தொழிலாளர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அவர்களைப் பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவது குறித்துக் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.


விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதில் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுவதோடு, அந்தச் செயல்முறையை எளிதாக்குவதற்கு விவசாய சங்கங்களை எவ்வாறு ஈடுபடுத்தலாம் என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. துறைமுக மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளுக்காக எரிபொருள் வழங்குவதில் எழுந்துள்ள நிலைமை குறித்துக் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடி ஒரு வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதற்கும், முதலீட்டுச் சபை மற்றும் பெருந்தோட்டத் துறை போன்ற துறைகளுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.


சுகாதாரச் சேவையை அத்தியாவசியச் சேவையாகப் பேணுவதோடு, எழுந்துள்ள நிலைமைக்கு மத்தியில் அதிகபட்ச எரிபொருள் சிக்கனத்தை உறுதிப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடித் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பிராந்திய எரிபொருள் கையிருப்புகளைப் பேணும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மருந்து விநியோகம் மற்றும் வைத்தியசாலைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான எரிபொருள் தேவை குறித்த தகவல்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


மக்களின் போக்குவரத்துத் தேவைகளை முறையாகப் பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் அந்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டபடி முன்னெடுத்துச் செல்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தற்போதைய சூழலில் தேசியப் பொருளாதாரத்தில் குறைந்தபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கட்டுமானத் துறையில் எழுந்துள்ள நிலைமைகளை முகாமைத்துவம் செய்வது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.


தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்படும் தகவல் முறைமை ஒன்றைப் பேணி அவற்றை மீளாய்வு செய்வதன் மூலம், நாட்டின் பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்க்கையையும் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான முழுமையான தலையீட்டை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.