மட்டுநகர் -நெல்லிக்காடு மர்மம்: பெண்ணைப் பின்தொடர்ந்த மர்மப் பெண் யார்?

 

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் உள்ள பொதுக்கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் உயிருடனும், மற்றொரு பெண்ணின் சடலம் சிதைந்த நிலையிலும் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் இன்றைய தினம் மேலதிக சோதனைகளை முன்னெடுத்தனர்.

குறித்த கிணற்றினுள் மேலும் ஏதேனும் சடலங்கள் இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய மண்முனை தென்மேற்குப் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் கிணற்றிலுள்ள நீர் இறைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. எனினும், இந்த சோதனையின் போது வேறு சடலங்கள் ஏதும் மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை, வவுணதீவு மற்றும் வெல்லாவெளி ஆகிய மூன்று பொலிஸ் நிலையங்களும் இணைந்து விசேட குழுக்கள் மூலம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.


மீட்கப்பட்ட சடலம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40ஆம் கிராமம், வம்மியடியூற்றினைச் சேர்ந்த 45 வயதுடைய ரவி நளாயினி என்பவருடையதாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சடலத்தின் அருகே இருந்த பாதணிகளை வைத்து அவர்கள் இதனைத் தெரிவித்துள்ள போதிலும், பிரேத பரிசோதனையின் பின்னரே அது உறுதிப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இதேவேளை, உயிருடன் மீட்கப்பட்ட பெண் வீதியில் நடந்து செல்லும் காட்சியும், அவருக்குப் பின்னால் மற்றொரு பெண் பின்தொடர்ந்து செல்லும் காட்சியும் அடங்கிய சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன. பின்தொடர்ந்து செல்லும் அந்தப் பெண்ணே இந்த கடத்தல் மற்றும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டிருக்கலாம் என சமூக ஊடகங்களில் சந்தேகங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கொத்தியாபுலையில் நேற்றுமுன்தினம் காணாமல் போன பெண்ணே உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண் குறித்த மர்மம் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.