தற்போது நிலவும் வரட்சியான வானிலை நிலவரங்களுக்கு மத்தியில், பாடசாலைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் விதம் குறித்த பரிந்துரைகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பின்வரும் பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்:
1. வெப்பத் தசைப்பிடிப்பு (Heat Cramps) - அதிக வியர்வை காரணமாக நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் தாது உப்புகள் வெளியேறுவதால் ஏற்படும் தசைப்பிடிப்பு: கை, கால்கள் மற்றும் வயிற்றில் தசை வலி மற்றும் பிடிப்பு ஏற்படும்.
முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்).
2. வெப்பக் களைப்பு (Heat Exhaustion) - அதிக வெப்பநிலை காரணமாக ஏற்படும் கடும் சோர்வு: அதிக வியர்வை, உடல் தளர்ச்சி, மயக்கம். முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீர் அருந்துதல் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்), குளித்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல்.
3. வெப்பத்தாக்கம் (Heat Stroke) - உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் செயல்முறை செயலிழப்பதால் ஏற்படும் நிலை: அதிக உடல் வெப்பநிலை, நாடித்துடிப்பு மற்றும் சுவாச வேகம் அதிகரித்தல், மனக்குழப்பம், தலைவலி, வலிப்பு, மயக்கமடைதல்.
முதலுதவி: குளிர்ந்த நிழலான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல், உடலில் உள்ள தேவையற்ற இறுக்கமான ஆடைகளை அகற்றுதல்/தளர்வு செய்தல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல். இது மிகவும் ஆபத்தான நிலை என்பதால் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் 1990 ஐ அழைத்து 'சுவசரிய' நோயாளர் காவு வண்டி சேவையின் உதவியைப் பெறவும் அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியைப் பெற நடவடிக்கை எடுக்கவும். தாகம் இல்லாவிட்டாலும் அதிகளவு நீர் அருந்துதல் வேண்டும்.
அதிக வெப்பம் உணரப்படும் போது முகம், கைகள் மற்றும் கால்களைக் குளிர்ந்த நீரால் நனைத்தல்.
அதிக வெப்பம் காரணமாக ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் ஆசிரியர் அல்லது பெரியவர்களிடம் அறிவித்து உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுதல்.
