அதிர்ச்சி செயல் ; கடனைத் திருப்பிச் செலுத்தாத தொழிலாளியை நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை

புத்தளத்தில் கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பிச் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக, மேசன் தொழிலாளி ஒருவரைக் கடத்திச் சென்று நாய் கூண்டில் அடைத்து வைத்திருந்த கும்பலை லுணுவில பொலிஸார் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.கடந்த 23ஆம் திகதி லுணுவில, வென்னப்புவ மற்றும் பண்டிரிப்புவ ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டார்.

கற்பிட்டி, நுரைச்சோலை - மாம்புரிப் பகுதியில் வசிக்கும் குறித்த மேசன் தொழிலாளி, கடந்த 23ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.இதன்போது, இனந்தெரியாத கும்பலொன்று கதவைத் தட்டி, அவரைப் பலவந்தமாக வெள்ளை நிற காரில் கடத்திச் சென்றுள்ளது.

இது குறித்து அவரது மனைவி நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினைத் தொடர்ந்தே விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.

முதற்கட்ட விசாரணைகளில், பாதிக்கப்பட்ட நபர் பிரதான சந்தேக நபரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியமையே இந்தக் கடத்தலுக்குக் காரணமாகும்.

கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை அவரை பண்டிரிப்புவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த நாய் கூண்டுக்குள் அடைத்து வைத்து அக்கும்பல் சித்திரவதை செய்துள்ளது.

பல மணி நேரம் உணவு மற்றும் நீரின்றி நாய் கூண்டில் அடைக்கப்பட்டிருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்தத் தொழிலாளி, தற்போது சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் ஆலோசனையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பில், பிரதான சந்தேக நபர் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுணுவில பகுதியைச் சேர்ந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.