அனர்த்த பாதிப்புக்குள்ளான வணிகம், தனிநபர்களுக்கு வங்கி உதவிகள் - மத்திய வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை
தற்காலிக கடன் நிவாரணம் கடனாளர்களுக்கு புதிய கடன் வசதி தாமத கட்டணம், அபராத வட்டி தவிர்ப்பு
அண்மைய புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களினால் வருமானம் அல்லது வியாபாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கான நிவாரண வழிமுறைகளை வழங்கும் வகையில் அனுமதிப்பத்திரம் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கி, சுற்றறிக்கையொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இது குறித்து இலங்கை மத்திய வங்கி நேற்றைய (2025.12.05) திகதியில் வெளியிட்டுள்ள குறித்த சுற்றறிக்கை வருமாறு,
அண்மைய புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு
பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டும், வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கிகள் சங்கத்தின் (உத்தரவாதம்) முன்மொழிவுகளையும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்குப் பங்கமில்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்றிறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்கான தேவையினையும் முன்னிறுத்தி, வருமானம் அல்லது வியாபாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள (இதன் பின்னர் கடன்பாட்டாளர்கள் எனக்குறிப்பபிடப்படும்) தனிப்பட்டவர்கள் மற்றும் வியாபாரங்களுக்கான நிவாரண வழிமுறைகளை வழங்குவதற்கு அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளுக்கும் 2025.12.05 அன்று திகதியிடப்பட்ட 2025ஆம் ஆண்டின் 04ஆம் இலக்கச் சுற்றறிக்கையினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
கடன்பாட்டாளர்களிடமிருந்து எழுத்திலான அல்லது இலத்திரனியல் வழிமுறைகளூடான கோரிக்கையொன்றை 2026 சனவரி 15ஆம் திகதிக்குள் பெறுமிடத்து, பின்வரும் நிவாரண வழிமுறைகளை உரிமம்பெற்ற வங்கிகள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
தற்காலிக கடன் நிவாரணம்:
(அ) அந்தந்த விடயத்தின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட கடனாளர்களின் ஏற்கனவேயுள்ள கொடுகடன் வசதிகளின் மூலதனம் அத்துடன்/ அல்லது வட்டியின் மீள்கொடுப்பனவினை 3 தொடக்கம் 6 மாதக் காலப்பகுதிக்கு இடைநிறுத்துதல்.
(ஆ) இது தொடர்பாக, இடைநிறுத்தப்படும் காலப்பகுதியில் மேற்குறிப்பிடப்பட்ட ஏற்புடைய ஒப்பந்த வட்டி வீதத்தை விடவும் அதிகமான வட்டி வீதமொன்றை உரிமம்பெற்ற வங்கிகள் விதிக்கக்கூடாது என்பதுடன் பிற்போடப்பட்ட வட்டிக் கொடுப்பனவுகளின் மீது எவ்விதமான வட்டியும் விதிக்கப்படவில்லை என்பதையும் உரிமம்பெற்ற வங்கிகள் உறுதிப்படுத்த வேண்டுமெனக் கோரப்படுகின்றன.
2. பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களுக்கான புதிய கடன் வசதிகள்: கடன்பாட்டாளரின் மீள்கொடுப்பனவு இயலாற்றலைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்ட தனிப்பட்டவர்களுக்கும் வியாபாரங்களுக்கும் விடயத்திற்கு விடயம் என்ற அடிப்படையில் புதிய கடன் வசதிகளை வழங்குதல். இது தொடர்பில்,
(அ) மேலே பந்தி (1)இல் குறிப்பிட்ட இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதி முடிவடைந்ததைத் தொடர்ந்து குறைந்தபட்சம் 3 மாத சலுகைக்காலப்பகுதியின் பின்னர் புதிய கடனின் மீள்கொடுப்பனவு தொடங்கும்;
(ஆ) 2 ஆண்டுகள் வரை வழங்கப்படும் எந்தவொரு புதிய கடனிற்கும், ஆண்டிற்கு உயர்ந்தபட்சம் நிலையான 9 சதவீத வட்டி வீதம் அல்லது இச்சுற்றறிக்கையின் திகதியன்றுள்ளவாறு தொடர்புடைய கடன்பாட்டாளருக்கு ஏற்புடைய வங்கி மேலதிகப்பற்று அல்லது கடன்வசதிகளின் ஒப்பந்த வட்டி வீதம் ஆகியவற்றில் எது குறைந்தளவானதோ அது விதிக்கப்படும்.
(இ) 2 ஆண்டுகளுக்கு மேலான நீண்டகால தவணையொன்றுக்காக வழங்கப்படும் ஏதேனும் புதிய கடனிற்கு, கடன்பாட்டாளருடனான கடன் வசதி உடன்படிக்கையில் குறித்துரைக்கப்பட்டவாறு 2 ஆண்டுகளின் இறுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன்வழங்கல் வீதத்துடன் இணைக்கப்பட்ட வட்டி வீதத்திற்கு உரிமம் பெற்ற வங்கியினால் வட்டி வீதம் திருத்தப்படலாம்.
போன்றவிடயங்களை உரிமம்பெற்ற வங்கிகள் உறுதிப்படுத்துமாறு கோரப்படுகின்றன.
3. இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட கடன்பாட்டாளர்களின் அனைத்து கொடுகடன் வசதிகள் மீதான காசோலைத் திரும்பலுக்கான அறவீடு, நிறுத்தப்பட்ட கொடுப்பனவுகள், பிந்திய கொடுப்பனவுக் கட்டணங்கள், கடன் மீளமைப்பு/மறுசீராக்கம் கட்டணங்கள் மற்றும் தண்ட வட்டி என்பவற்றினை 2026.01.31 வரை இடைநிறுத்துமாறு உரிமம்பெற்ற வங்கிகள் கோரப்பட்டுள்ளன. தன்னியக்க முறைமையினால் உருவாக்கப்படும் பதிவுகளூடாக கட்டணங்கள் அறவிடப்படுமிடத்து, அவை அறவிடப்பட்ட 3 வியாபார நாட்களுக்குள் உரிய கணக்கிற்கு மீளளிக்கப்பட வேண்டும்.
4. மேலும், ஏதேனும் கடன் மீளமைப்பு/ மீள்அட்டவணைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்; அத்தோடு கடன் வசதிகளின் மூலதனம், வட்டி மற்றும் ஏனைய கட்டணங்களின் வகைப்பாடு என்பன ஒப்புதலுக்கு முன்னர் உரிய கடன்பாட்டாளருக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டு, கடன்பாட்டாளரின் ஒப்புதல் எழுத்து மூலமாகவோ அல்லது இலத்திரனியல் வழிமுறைகளூடாகப் பெறப்படுதல் வேண்டுமென உரிமம்பெற்ற வங்கிகள் கோரப்படுகின்றன.
மேற்குறித்த நிவாரணங்கள் வழங்குவதற்கு மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில், அத்தகைய மறுப்பிற்கான காரணங்களை எழுத்துமூலம் கடன்பாட்டாளருக்கு அறிவிப்பதோடு, அத்தகைய மறுப்பிற்கு எதிராக இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு மேன்முறையீடு செய்யும் வாய்ப்பொன்று காணப்படுவது தொடர்பில் கடன்பாட்டாளருக்கு அறிவுறுத்துதலும் வேண்டும். மேலும், கொடுகடன் தகவல் பணியகத்தின் பாதகமான அறிக்கைகளை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டு கடன்பாட்டாளர்களின் புதிய கடன் விண்ணப்பங்களை நிராகரித்தலாகாதென உரிமம்பெற்ற வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.
வாழ்வாதாரத்தை இயல்புநிலைப்படுத்தவும், வியாபாரங்களுக்கு உரிய நேரத்தில் புத்துயிரளிக்கவும் இலங்கை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு பேரனர்த்த நிவாரண வழிமுறைகளுக்கு மேலதிகமாக, பாதிப்படைந்த தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள் மேற்குறிப்பிட்ட நிவாரணங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
