யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்பகுதியில் இன்று நீச்சலில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் சிறிய படகில் பண்ணைக் கடலுக்குச் சென்று, கடலில் குதித்து நீச்சல் அடித்தபோது, எதிர்பாராதவிதமாக சுழிக்குள் அகப்பட்டுத் தத்தளித்துள்ளனர்.
இதனை அவதானித்த பண்ணைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாண காவற்துறையினருக்குத் தகவல் அளித்ததுடன், மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்ட நான்கு இளைஞர்களும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
ஏனைய இரு இளைஞர்களும் தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நீச்சல் தவிர்ந்த இடங்களில் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
