25000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு

 

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25ஆயிரம் ரூபா கொடுப்பனவில் எந்தவிதமான ஊழல்களும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாது என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் இடம்பெற்ற வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் தொடர்பான அறிக்கையானது 30.11.2025 அன்று தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலவர அறிக்கையின் பிரகாரம் 25 மாவட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டது.

அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 14ஆயிரத்து 624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிக்கை செய்தோம். அந்த அறிக்கையின் பிரகாரம் 365.6 மில்லியன் ரூபா  எமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

05.12.2025 அன்று பி.ப 5.00 மணியளவில் கிடைக்கப்பெற்ற அனர்த்த சேவைகள் நிவாரண நிலையத்தின் கடிதத்தின் பிரகாரம், சுற்றிக்கையை விட மேலதிக விடயத்தையும் அந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதியில் சேதமடைந்த வீடுகள், வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படா விட்டாலும் வெள்ளத்தால் சிறிய அளவு பாதிக்கப்பட்ட வீடுகள் ஆகியவற்றையும் இந்த கொடுப்பனவுக்கான தகுதிக்குள் உள்ளடக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம சேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரின் கையொப்பங்களை பெற்ற, தகுதியான பயனாளிகளுக்கு மாத்திரமே கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டது.

சரியான முறையில் அந்த 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட பின்னர் மேலதிகமாக நிதி ஒதுக்கீடு எங்களிடம் இருக்குமாக இருந்தால் அந்த நிதியானது அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு எம்மால் அனுப்பி வைக்கப்படும்.

தற்போது கிடைக்கப்பெற்ற கடிதங்கள், சுற்றறிக்கைகள் என்பவற்றுக்கு அமைவாக படிவங்களை நிரப்புவதன் ஊடாக தங்களது பிரதேசங்களில் இருக்கின்ற பயனாளிகளை பிரதேச செயலர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 7.9 வீதமானவர்கள் இந்த வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாணமானது அதிகளவான சனத்தொகையை கொண்ட மாவட்டம். ஆகையால் இந்த பாதிப்புக்கான நிதி ஒதுக்கீடாக எமக்கு 365.6 மில்லியன் ரூபாவாக கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த வெள்ள அனர்த்ததின்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் இரவு பகல் பாராது அர்ப்பணிப்போடு செயற்பட்டார்கள். 

உத்தியோகப் பற்றற்ற, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்கின்றபோது கடமை உணர்வுடன் அர்ப்பணிப்பாக பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் மனவுளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

25 ஆயிரம் ரூபா பெறுவதற்கு தகுதியான குடும்பங்களை தெரிவு செய்கின்றபோது அவர்களது விபரங்களை கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் காட்சிப்படுத்துமாறு அறிவித்துள்ளோம்.

இந்த கொடுப்பவுகளில் குளறுபடிகளோ, மோசடிகளை, ஊழல்களோ இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அவ்வாறான சந்தர்ப்பங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எப்போதும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.