தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்த இளைஞனின் இறுதிக்கிரியைகள் இன்று அவரது சொந்த ஊரில் நடைபெற்றன.
செல்வநாதன் புஸ்பகுமார் (28) என்ற இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கடந்த 20 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று இரவு வேளையில் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்றில் இருந்த எஸ்.புஸ்பகுமார் (28) என்ற இளைஞனும் இருந்துள்ளார்.
இதன்போது பிரதான பாதையில் வருகை தந்த ஜீப் வண்டி ஒன்று திடீரென இளைஞர்கள்மீது மோதியுள்ளது.
இதில் இரு இளைஞர்கள் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் நுவரெலியாவில் இருந்து நேற்று தலவாக்கலை பகுதியில் உள்ள அவரது சொந்த ஊருக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பல ஆட்டோக்களும் அணிவகுத்து வந்தன.
சடலம் தலவாக்கலை நகரை வந்தடைந்த பின்பு, போராட்டம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


