எதிர்வரும் நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
இன்று முதல் (05.11.2025) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மழை கிடைக்க தொடங்கும். இம் மழை எதிர்வரும் 11.11.2025 வரை கிடைக்கும்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் (05.11.2025) பரவலாக மழை கிடைக்க தொடங்கும். ஆயினும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு எதிர்வரும் 07.11.2025 முதல் மழை பரவலாக கிடைக்க தொடங்கும்.
இதுவரை வடகீழ்ப் பருவமழை நாம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. இதனால் இவ்வாண்டு வடகீழ்ப் பருவமழை குறைந்து மழையற்ற மாரியாக அமையுமோ என பலர் அச்சப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது. ஆனால் முன்னரே குறிப்பிட்டபடி இவ்வாண்டு வடகீழ்ப் பருவமழை சராசரியை விட சற்று அதிகமாகவே கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் 13.11.2025 முதல் வடகீழ்ப் பருவமழை அதிகரிக்க தொடங்கும்.
தரவுகளின் அடிப்படையில் இவ்வாண்டு வடக்கு மாகாணத்தின் ஆண்டு சராசரி மழைவீழ்ச்சியை(1240 மி.மீ.) விட கூடுதலான மழைவீழ்ச்சியை நாம் பெற்று விட்டோம். உதாரணமாக கடந்த மே மாதம் மட்டும் 300 மி மீ. இனை விட கூடுதலான மழைவீழ்ச்சியை நாம் பெற்று விட்டோம். ஆனால் பரவலாக மழை கிடைத்தமையால் நாம் அதனை உணரவில்லை. இதனால் எமக்கு மழை கிடைக்கவில்லை என்ற உணர்வு உள்ளது.
ஆனால் கிழக்கு மாகாணத்தின் சராசரி மழைவீழ்ச்சியை பெற ( 1480 மி.மீ.) நாம் இன்னமும் சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்.
வழமையாக வடக்கு மாகாணத்தை விட கிழக்கு மாகாணமே கூடுதலாக மழை வீழ்ச்சியைப் பெறுவதுண்டு. ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக வடக்கு மாகாணம் அதிக மழையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றம், எதிர்காலத்தில் பல வியக்கத்தக்க ஆச்சரியங்களையும், விரும்பத்தகாத மாற்றங்களையும் எங்கள் பிரதேசங்களின் வானிலைக் கோலங்களில் ஏற்படுத்தும்.
-நாகமுத்து பிரதீபராஜா-


