அகமதாபாத், அக்டோபர் 15 : 2025 ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா பிளைட் 171 விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்த சம்பவம் இன்றும் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விசுவாஸ் குமார், நான்கு மாதங்களுக்குப் பிறகும் அதிர்வின் சுமையை சுமந்தபடி வாழ்க்கைக்கு போராடி வருகிறார். தனது இளம் தம்பி அஜய் குமாரை இழந்த துயரத்தில், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி, உளவியல் ரீதியாக உடைந்து போயுள்ளார்.
விபத்து நிகழ்ந்து நான்கு மாதங்கள் கடந்த இன்று வரை, விசுவாஸ் குமார் தனது பெற்றோருடன் கூட தொடர்பு கொள்ளாமல், லண்டனுக்கு சென்று வாழ்ந்து வருகிறார். அவரது நண்பர்களின் தொலைபேசி அழைப்புகளையும் தவிர்த்து வருகிறார்.
"விமான விபத்து குறித்து சிறு குறிப்பிடல் கூட அவருக்கு பெரும் பதற்றத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. அவர் மீள முடியாத அளவுக்கு உடைந்துவிட்டார்," என்று அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார்.அந்த கொடுமையான விபத்தில், ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறியதில் 241 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில் விசுவாஸின் 28 வயது தம்பி அஜய் குமாரும் அடங்குவர். அஜய், தனது சகோதரனான விசுவாஸுடன் ஈருடல் போன்று இணைந்து வாழ்ந்தவர். "இருவரும் ஒரே உயிர் போல் இருந்தனர். அஜயை இழந்தது போதாது, விசுவாஸ் இந்த வேதனையில் உழல்கிறான்.
ஒரு மகனை இழந்து, இன்னொரு மகன் மன உளைச்சலில் தவிக்கும் இந்த கொடுமையை எப்படி சகித்துக்கொள்வது?" என்று அவர்களின் தந்தை ரமேஷ் குமார் கண்ணீருடன் பேசினார்.விசுவாஸ் குமார், 32 வயதான இந்திய வம்சாவளியான இளைஞர், விபத்துக்குப் பின் மருத்துவர்களின் சிகிச்சை பெற்று மீண்டாலும், உளவியல் ரீதியான பாதிப்புகளில் சிக்கியுள்ளார்.
அவரது நண்பர்கள் கூறுகையில், "அவன் அதிர்ஷ்டசாலி என்று சொல்லலாமா? 241 பேரும் இறந்த இடத்தில் உயிர் பிழைத்தவன். ஆனால் இந்த வேதனையுடன் எஞ்சிய வாழ்நாளை கழிக்க வேண்டிய துரதிஷ்டசாலி என்று சொல்லலாமா? அவன் தினமும் அந்த விபத்தை மீண்டும் மீண்டும் அனுபவிக்கிறான், பேசாம நானும் இறந்திருக்கலாம்.. என்று பும்புகிறான்" என கூறினார்.
விபத்துக்குப் பின், விசுவாஸ் குமாரின் குடும்பம் முழுவதும் உடைந்து போயுள்ளது. அவரது தாயார் லட்சுமி, "மகன் உயிர் பிழைத்தது சிறிய ஆறுதல். ஆனால் அவன் தன்னை இழந்துவிட்தை போல் உணர்கிறோம்," என்று கூறினார்.
விமான நிறுவனமான ஏர் இந்தியா, விபத்து விசாரணையைத் தொடர்ந்து வருகிறது, ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் உளவியல் சிகிச்சைக்கான உதவிகள் போதுமானதாக இல்லை என்று குடும்ப உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர்.
இந்த சம்பவம், விமான பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உளவியல் ஆதரவு குறித்து புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. விசுவாஸ் குமாரின் எதிர்காலம் என்னவாகும் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் அவரது கதை, உயிர் பிழைப்பின் இரு முகங்களையும் நமக்கு நினைவூட்டுகிறது – மகிழ்ச்சியும், அழிவும்.
