இவர் தான் ரியல் ஹீரோ ரயில்வே ஸ்டேஷனில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த வாலிபர்...
மும்பை ராம் மந்திர் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த ஒரு சம்பவம், ஒருவரின் துணிச்சலான செயலால் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டதால் சமூக ஊடகங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது...
செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் உள்ளூர் ரயிலில் பயணித்த ஒரு பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதைக் கவனித்த அருகில் இருந்த ஒருவர் உடனடியாக ரயிலின் அவசர சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினார். பின்னர், தாமதமின்றி அந்தப் பெண்ணுக்கு நடைமேடையிலேயே பிரசவிக்க உதவினார்.
இந்த சம்பவத்தை ரயில் நிலையத்தில் இருந்த மஞ்சீத் தில்லான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த மனிதர் உண்மையிலே துணிச்சலானவர். குழந்தை ஏற்கனவே பாதியளவு வெளிவந்திருந்தது. கடவுள் அவரை அங்கு அனுப்பியதாகவே தோன்றியது," என தில்லான் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் வெளியான வீடியோவில், அந்த நபர், இது எனது வாழ்க்கையில் இப்படிச் செய்வது முதல் முறை. நான் மிகவும் பயந்தேன். ஆனால் ஒரு பெண் மருத்துவர் வீடியோ அழைப்பில் வழிகாட்டினார்," என்று கூறியிருப்பது கேட்கப்படுகிறது...
ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் ஒரு பெண் மருத்துவர் வீடியோ அழைப்பு மூலம் பிரசவ வழிமுறைகளை அந்த ஆணுக்கு விளக்கி வழிகாட்டினார். அவர் கூறிய ஒவ்வொரு அறிவுறுத்தலையும் அந்த நபர் துல்லியமாக பின்பற்றியதால் குழந்தை வெற்றிகரமாகப் பிறந்தது. பின்னர் ரயில்வே ஊழியர்களும் பயணிகளும் இணைந்து தாயையும் குழந்தையையும் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
