பீடி விலை இன்றிலிருந்து (10) அதிகரிப்பதாக அகில இலங்கை பீடி உற்பத்தியாளர்கள் மற்றும் பீடி இலை, புகையிலை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்புடன் இரண்டேகால் அங்குல நீளம் கொண்ட பீடி 15 ரூபா வரையிலும் இரண்டு அங்குலம் மற்றும் சிவப்பு நூல் பீடியொன்றின் விலை 13 ரூபா வரையிலும் அதிகரிப்பதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டேகால் அங்குலம் கொண்ட பீடியொன்றின் விலை 10 ரூபாவாகவும் இரண்டு அங்குலம் கொண்ட மற்றும் சிவப்புநூல் கொண்ட பீடியொன்றின் விலை 9.50 ரூபாவாகவும் இருந்ததாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
பீடியொன்றுக்கான 02 ரூபா வரியை தற்போதைய அரசாங்கம் 03 ரூபா வரை அதிகரித்துள்ளமை மற்றும் ஏனைய செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பீடி விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாக அந்தச் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
பீடிக்கான உற்பத்திச் செலவு 13.75 ரூபா என்றாலும் கடந்த காலங்களில் அந்த செலவுக்கும் குறைந்த விலையில் பீடி சந்தைக்கு விநியோகிக்கப் படுவதால் இந்த தொழிற்றுறையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்தச் சங்கம், அரசுக்கு முறையாக வரிச் செலுத்த வேண்டுமென்றால் பீடி விலையை அதிகரிப்பதை கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பீடி தொழிற்றுறையின் பிரதான மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் இலை சட்டவிரோதமாக இந்த நாட்டுக்கு எடுத்து வருதல், அதனை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரிகள் தோல்வியை சந்தித்துள்ளமையினால் பீடி தொழிற்றுறை தொடர்ந்தும் நிச்சயமற்ற நிலைமையை சந்தித்துள்ளதாகவும் சகல பீடி வர்த்தகர்களும் இந்த புதிய விலைக்கு இன்றிலிருந்து பீடி விற்பனை செய்யப்படாவிட்டால் அதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பீடி இலை தொடர்பில் நிலவும் சட்டவிரோத நிலைமையை தவிர்த்துக்கொள்வதற்கு தலையிடுமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக அகில இலங்கை பீடி உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
