வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
நேற்றைய தினம், ஒக்டோபர்.12. 2025 (ஞாயிற்றுக்கிழமை)
வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடனும் வவுனியா மாநகர சபையினரின் ஆதரவுடனும் ஒன்றினைந்து Rotaract club of Vavuniya Heritage ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கோலப் போட்டி நிகழ்வானது வவுனியா மாநகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
காலை 9.00 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்வில், 150 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தனர் அத்தோடு மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போட்டிகளும் தனித்துவமாக நடத்தப்பட்டன.
![]() |
ஒக்டோபர் மாதம் குழந்தைகளுக்குரிய மாதமாகக் கருதப்படுவதால், இந்நிகழ்வு குழந்தைகளின் கலைத்திறமையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது. இதன் மூலம் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் தமிழர் மரபு மாணவர்களிடையே பரவச் செய்வதே முக்கிய இலக்காக இருந்தது.
மாணவர்கள் வயது வரையறையின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தனித்துவமான கோலங்கள் வரைந்தனர். ஒவ்வொரு படைப்பும் அவர்களின் படைப்பாற்றல், மற்றும் சிந்தனைத் திறனை வெளிப்படுத்தியது.
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு திறமையான நடுவர்கள் மூலம் முடிவுகள் தெரிவு செய்யப்பட்டு மேலும் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மூன்று கோலங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வவுனியா மாநகர சபை முதல்வர் திரு. சுந்தரலிங்கம் காண்டீபன், துணை முதல்வர் திரு. பரமேஸ்வரன் கார்த்தீபன், வர்த்தக சங்கத் தலைவர் திரு. குணசேகரன் கிருஷ்ணமூர்த்தி, வவுனியா மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் திருமதி. புஸ்பமாலினி சந்திரமோகன் சர்மா உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தியிருந்தனர்.
மேலும், யாழ் பெனிசுலா Rotary கழகத்தின் வழிகாட்டுதலோடு இந் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத் தக்கது இக் கழகத்தின் தலைவர் Rtn.கஜேந்திரா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வு, வவுனியா மாணவர்களுக்கு திறமை, பாரம்பரியம் மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்திய ஒரு சிறப்பான தருணமாக அமைந்திருந்தது








