புத்தளம் - வென்னப்புவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உல்ஹிட்டியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பராமரிப்பாளரை கொலை செய்து, வீட்டிலிருந்து கொள்ளையிட்டுச் சென்ற வேன் கண்டி பிரதேசத்தில் வைத்து வென்னப்புவை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட வேனின் மதிப்பு பல கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைசெய்யப்பட்டவர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் இத்தாலியில் வசிப்பதால் கொலைசெய்யப்பட்ட நபர், நீண்ட காலமாக வீட்டை பராமரித்து வந்துள்ளார்.
இத்தாலியில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் உறவினர் ஒருவர் வெள்ளிக்கிழமை (13) இந்த வீட்டிற்குச் சென்று பார்த்த போது பராமரிப்பாளர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வீட்டில் இருந்த வேன் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கொள்ளையிடப்பட்ட வேன் கண்டி - பேராதனை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவர் கொள்ளையிடப்பட்ட வேனை கண்டி பேராதனை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.